கடந்த 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானத்தை துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி நடுவானில் கடத்த முயற்சி செய்தார். இந்த முயற்சியை இந்திய பைலட் ஸ்மித் மச்சார் தனது உயிரைப் பணயம் வைத்து முறியடித்தார். யுஏஇ போலீஸார், துணை பைலட் ஹமாம் அல் ஹமாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விமானத்தை கடத்த முயன்ற துணை பைலட் ஹமாமி, யுஏஇ-யில் பிறந்தார். அவரது தாய் சிரியாவை பூர்விகமாகக் கொண்டவர். தந்தை ஓமனை சேர்ந்தவர். இதனால் ஓமன் குடியுரிமையை ஹமாமி பெற்றார். ஆனால் அவர் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை சிரியாவில் கழித்தார். அங்கு அவருக்கு அல் – காய்தா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சிந்தனைகள் மீது மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது.
பள்ளிப் படிப்புக்குப் பிறகு பிரிட்டனின் பக்கிங்ஹாம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்பில் விமான போக்குவரத்து மேலாண்மை படிப்பை நிறைவு செய்தார். பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விமானிக்கான பயிற்சியை பெற்றார். பின்னர் ஓமன் அரசின் ஓமன் ஏர் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியில் சேர்ந்தார். ஆனால் தீவிரவாதிகளின் இணையதளங்களில் அவர் ஆர்வம் காட்டியதால் 2024-ல் பைலட்டாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டது.
2025 ஜூனில் மொராக்கா அரசின் ராயல் ஏர் மொராக்காவில் பைலட்டாக பணியில் சேர்ந்தார். கடந்த ஜனவரியில் யுஏஇ அரசின் ஃபிளை துபாய் நிறுவனத்தில் பைலட்டாக பணியில் சேர்ந்தார். அவரது சமூக வலைதள பதிவுகளில் அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர்கள், தற்கொலைப் படை தீவிரவாதிகளின் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
அல் – காய்தா அமைப்புக்கும் ஹமாம் அல் ஹமாமிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து யுஏஐ போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து யுஏஇ போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “சிரியாவில் வாழ்ந்தபோது ஹமாம் அல் ஹமாமிக்கு தீவிரவாதம் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஃபிளை துபாய் விமானத்தை தரையில் மோதி தகர்க்க திட்டமிட்டிருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். உயிரிழப்பு குறித்து அஞ்சவில்லை என்றும் கூறியிருக்கிறார்” என என்று தெரிவித்தன .Hindu Tamil Thisai




