லண்டனைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை 2026-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தத் தரவரிசையில் அது முதலிடம் பிடித்துள்ளது என ‘ செய்தி வெளியிட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் இந்த விமான நிலையம் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. 2000-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விருதுகளின் வரலாற்றில், சாங்கி விமான நிலையம் 14-வது முறையாக இந்த பட்டத்தை வென்றுள்ளது ஒரு சாதனையாகும்.
மேலும், இந்த விமான நிலையம் ஆசியாவிலேயே சிறந்ததாகவும், விமான நிலைய உணவு மற்றும் குடிவரவு சேவைகளில் உலகிலேயே சிறந்ததாகவும், 60 முதல் 70 மில்லியன் பயணிகளுக்குச் சேவை வழங்கும் சிறந்த விமான நிலையமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டில், சாங்கி விமான நிலையம் 69.98 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. சாங்கி விமான நிலையக் குழுமத்தின் (CAG) தலைமைச் செயல் அதிகாரி யாம் கும் வெங், மார்ச் 18 அன்று லண்டனில் நடைபெற்ற ஒரு விழாவில் விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
உலகளாவிய தரவரிசையில் சாங்கியைத் தொடர்ந்து, தென் கொரியாவின் இன்சியான் அனைத்துலக விமான நிலையம், ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம், ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் மற்றும் ஜப்பானின் நரிட்டா அனைத்துலக விமான நிலையம் ஆகியவை முறையே இரண்டாவது முதல் ஐந்தாவது இடங்களைப் பிடித்தன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.




