விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு பிறகு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தனுஷ் உடனான நட்பு, பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விக்னேஷ் சிவன் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது
அப்பேட்டியில் விக்னேஷ் சிவன், “தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை நடிகராக தாண்டி ரொம்ப பெரிய இடத்தில் பார்க்கிறேன். ஏனென்றால் அவருடைய பிறந்த நாள் ஜூலை 28-ஆம் தேதி, அது தான் எனது அப்பா இறந்த நாள். ஆகையால் அவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன். சில விஷயங்கள் எதனால் நடந்தது, எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவருடைய நட்பை இழந்தது எனது மிகப்பெரிய இழப்பாக நினைக்கிறேன். ஒரு நல்ல நட்பை இழந்துவிட்டதால் அதனை அவமானமாக வும் பார்க்கிறேன்.
ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கி றது. இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் தனுஷ். ’விஜபி’ பட சமயத்தில் சுமார் 2 ஆண்டுகளாக அவர் கூடவே இருந்தேன். அந்த சமயத்தில் எல்லாம் அவர் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன். ‘விஜபி’ வெளியான சமயத்தில் அவர் ‘ஷமிதாப்’ படப்பிடிப்பில் இருந்தார்.
அன்று திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அங்கு நடந்ததை நான் போனில் சொன்ன போது, அவர் கலங்கியது எனக்கு தெரிந்தது. அந்த மாதிரி எனக்கு நிறைய அழகிய சம்பவங்கள் அவருடன் இருக்கிறது. அப்படியிருந்த நட்பு சில விஷயங்களால் இப்போது இல்லை.




