ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது.இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின.
இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக் கான மக்கள் திரண்டிருந்தனர்.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து முழுச் சூரிய கிரகணம் தென்பட்டதுடன், ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர் தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.
சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதன் காரணமாக சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஸ்பெயினின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்ட மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நீடித்த முழு இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.
அதேவேளை, சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாசரல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் பகுதிச் சூரிய கிரகணம் தென்பட்டது.




