சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி 12 பயணிகளுடன் வடக்கு-தெற்குவிரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, மலாக்கா அருகில் ஜாசினில் நேற்று (ஆகஸ்ட் 26) அதிகாலை 5 மணியளவில் கவிழ்ந்தது.
ஓர் 62 வயது சிங்கப்பூரர் உட்பட மூவர் அவ்விபத்தில் காயமடைந்தனர். சாலையில் இருந்து விலகி அந்தப் பேருந்து திசைமாறி பிறகு ஒருபக்கமாகச் சாய்ந்துக் கவிழ்ந்தது.
விபத்தில் 59 வயது மலேசிய சுற்றுலா வழிகாட்டியும், 42 வயது பிரிட்டன் நாட்டவரும் காயமடைந்தனர் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்த்து.
பேருந்து வடக்கு தெற்கு விரைவுச் சாலையின் 177.6 கிலோமீட்டர் தூரத்தை அடைந்த இடத்தில் விபத்து நிகழ்ந்து உள்ளது.
பேருந்துக்கு முன் சென்ற ஒரு லாரியின் வேகம் மெதுவடைந்தபோது அதன்மீது மோதுவதைத் தவிர்க்கப் பேருந்து ஓட்டுநர் சாலை வழித்தடத்தைக் கடந்து பக்கவாட்டில் சென்றார். அதனால் பேருந்து கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது என்று ஜாசின் வட்டாரக் காவல்துறைத் தலைவர் லீ ராபர்ட் விளக்கமளித்தார். பேருந்து ஓட்டுநருக்கும் எஞ்சிய எட்டுப் பயணிகளுக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று லீ உறுதிப்படுத்தினார்.




