துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு பாதுகாப்பு அளித்துச் சென்ற காவல்துறை வாகன அணிவகுப்பை, ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கேசாஸ்) நேற்று காலை பின்தொடர்ந்ததாகக் கூறப்படும் 27 வயதுடைய நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கஜாங்கிலிருந்து சுபாங் ஜெயாவில் உள்ள சன்வே மருத்துவ மையத்திற்கு அந்த அணிவகுப்பு சென்று கொண்டி ருந்தபோது, நெடுஞ்சாலையின் 48.5-வது கிலோமீட்டர் பகுதியில் காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் ஜம்சுரி இசா தெரிவித்தார்.
ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) ரக வாகனத்தை ஓட்டிச் சென்ற அந்த ஓட்டுநரிடம், அணிவகுப்பைப் பின்தொடர வேண்டாம் என்று காவல்துறை மோட்டார் சைக்கிள் வீரர் ஒருவர் எச்சரித்த போதிலும், அவர் அதை அலட்சியம் செய்துவிட்டு தொடர்ந்து அணிவகுப்பிற்கு மிக அருகில் பின்தொடர்ந்து சென்றதாக அவர் கூறினார்.
“அந்த ஓட்டுநர், அணிவகுப்பிலும் மற்ற சாலைப் பயனாளிகளின் பாதுகாப் பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கருதப்படுகிறது,” என்று ஜம்சுரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டதோடு, அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.




