Vimarsagan Media

Home » Malaysia » நெகிரி செம்பிலான் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும்: ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும்: ஸாஹிட்

வழக்கமான சட்டங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று நெகிரி செம்பிலானைச் சேர்ந்த பாரிசான் நேஷனல் கூட்டணியின் 18 மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடம், அக்கூட்டணியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, அவர்கள் மக்களின் நலனிலும், தங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை நிறைவேற்று வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கேட்டுக்கொண்டார்.

பொதுச் சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய, வழக்கமான சட்டங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை மாநில அரசாங்க நிர்வாகத்திலிருந்து தனித்து வைத்திருக்க வேண்டும் என்று துணைப் பிரதமருமான அவர் வலியுறுத்தினார்.

“நெகிரி செம்பிலான் ஆட்சியாளர், வட்டாரத் தலைவர்கள் மன்றம், அரச நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களில், எங்களது பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிமேலும் தலையிட வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன். மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு பொறுப்பை வழங்கியிருப்பதால், நாம் மக்களுக்குச் சேவை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

திங்கட்கிழமை (அக்டோபர் 19) மலேசிய அனைத்துலக வர்த்தக, கண்காட்சி மையத்தில் ‘சாலைப் பாதுகாப்பு மாநாடு 2026’ஐத் தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

தற்போது மாநில நிர்வாகக் குழு முழுமையாக அமைக்கப்படாத நிலையிலும், நெகிரி செம்பிலான் மாநில அரசு 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவுசெலவுத் திட்ட வரைவைத் தயாரித்து வருவதாக ஸாஹிட் தெரிவித்தார்.

எந்தவொரு சிக்கல் எழுந்தாலும், மக்களுடன் தொடர்புகொள்வதற்கும் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மாநில நிர்வாகம் தேக்கநிலையை அடையாமல் இருப்பதையும், அரசு அமைப்புகள் வழக்கம் போல் செயல்படுவதையும் உறுதிசெய்ய, மாநில அரசாங்கத்திற்கும் அதனுடன் இணங்காத 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top