மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலைக் காரணமாகக் காட்டி, அடுத்த இரண்டு மாதங்களில் 1,100 விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனம் நேற்று (மார்ச் 12) அறிவித்துள்ளது.
ஏர் நியூசிலாந்தின் மொத்த விமானச் சேவைகளில் ஏறத்தாழ ஐந்து விழுக்காடு ரத்து செய்யப்படும் என்றும் இதனால் 44,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக்கில் ரவிசங்கர் தெரிவித்தார்.
ரத்து செய்யப்படும் விமானங்கள் பெரும்பாலும் நியூசிலாந்திற்குள்ளான உள்நாட்டுச் சேவைகளாக இருக்கும் என்றும் சில அனைத்துலக விமானச் சேவைகளும் அதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பாவிற்குச் செல்வதற்கான மாற்றுப் பாதைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான விமானச் சேவைகள் பாதிக்கப்படாது என்று ரவிசங்கர் மேலும் தெரிவித்தார்.




