டிவி 2வில் முன்னர் ஒளிபரப்பாகி வந்த ‘கிளியோபாட்ரா இன் ஸ்பேஸ்’ என்ற அனிமேஷன் தொடரை உடனடியாகவும் நிரந்தரமாகவும் ரத்து செய்வதாக ரேடியோ டெலிவிஷன் மலேசியா (RTM) அறிவித்துள்ளது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் காலை 9 மணி நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட இந்தத் தொடரின் உள்ளடக்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த தொடர்ச்சியான கருத்துகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இன்று மலேசிய ஒளிபரப்புத் துறையின் மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில், தங்களது நிலையத்திற்காக வகுக்கப்பட்ட கடுமை யான ஒளிபரப்பு வழிகாட்டுதல்களில் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்று ஆர்டி எம் வலியுறுத்தியுள்ளது.
“ஒரு தேசிய பொது ஒளிபரப்பு நிறுவனமாக, சமூகம், மதம் மற்றும் உள்ளூர் கலாச்சார நெறிகளின் உணர்வுகளை மதிக்கும் தரமான, பாதுகாப்பான உள்ளடக்கத்தை வழங்கும் கொள்கைக்கு ஆர்டிஎம் தொடர்ந்து உறுதியுடன் உள்ளது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஒளிபரப்பை நிறுத்தியதுடன், இந்த மேற்பார்வைக் குறைபாட்டிற்கான மூல காரணத்தைக் கண்டறிய RTM-இன் உயர் நிர்வாகம் தற்போது ஒரு முழுமையான உள் விசாரணையை நடத்தி வருகிறது.தேசிய ஒளிபரப்புத் தரநிலை களைக் கண்காணிப்பதில் பொதுமக்கள் காட்டிய விழிப்புணர்வுக்கு அந்த ஒளிபரப்பு நிறுவனம் நன்றியை யும் தெரிவித்தது.
அந்த அனிமேஷன் தொடரில் லெஸ்பியன், கே, பைசெக்சுவல் மற்றும் டிரான்ஸ்ஜெண்டர் (LGBT) சித்தாந்தங்கள் தொடர்பான கூறுகள் இருப்பதாகக் கூறி, பார்வையாளர்கள் மத்தியில் அது கவலையை ஏற்படுத்தியிருந்தது.




