பேட்மிண்டன் உலக சாம்பியன்களான சென் தாங் ஜியே மற்றும் தோ ஈ வெய் ஆகியோர் இன்று இங்கு நடைபெற்ற 2025 தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் இருவரும் பெரும் வெற்றியாளர்களில் அடங்குவர்.
தாங் ஜியே, ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த விருதுக்காக அவர், சி ஷின் பெங் (வுஷு), ரஃபிக் இஸ்மாயில் (டென்பின் பௌலிங்), கைரி அபிப் அசார் (பென்சாக் சிலாட்) மற்றும் அப்துல் அஜீஸ் அகமது (பாடிபில்டிங்) ஆகியோரைத் தோற்கடித்தார்.
ஈ வெய், ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார். இந்த விருதுக்கு டான் சியோங் மின், பாங் புய் யீ (வுஷு), எம்மா ஃபிரியானா சரோஜி (லான் பௌல்ஸ்) மற்றும் நடாஷா முகமது ரோஸ்லான் (டென்பின் பௌலிங்) உள்ளிட்ட வலுவான பரிந்துரையாளர்கள் பட்டியல் இருந்தது.
இந்த ஜோடியின் வெற்றி ஆச்சரியமளி க்கவில்லை, ஏனெனில் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் மலேசிய கலப்பு இரட்டையர் ஜோடி என்ற வரலாற்றை அவர்கள் படைத்தனர். இந்த உலகப் போட்டி பாரிஸில் நடைபெற்றது.
நான்கு முறை இந்த விருதை வென்ற பேட்மிண்டன் ஜாம்பவான் டத்தொ லீ சோங் வெய்யின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் பெருமைப்படுவதாக டாங் ஜியே கூறினார்.
“உண்மையைச் சொல்லப்போனால், இந்த விருதை வெல்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார் டாங் ஜியே.
“நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தொலைக்காட்சியில் சோங் வெய்யைப் பார்த்திருக்கிறோம், அவர் மலேசியாவின் நாயகனாக இருந்தார்.
“சோங் வெய்யைப் போலவே, நாங்களும் (ஈ வெய்யுடன் சேர்ந்து) இளம் குழந்தை களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். அவர் எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்தார்.”
கடின உழைப்புக்கும் ஒழுக்கத்திற்கும் எப்போதும் பலன் கிடைக்கும் என்பதற்கு இந்த விருதை வென்றது ஒரு சான்று என்று ஈ வெய் கூறினார்.
தங்கள் பயணம் முழுவதும் தங்களுடன் இருந்த விசுவாசமான ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.




