கலப்பு இரட்டையர் பிரிவில் சிறந்து விளங்கும் சென் தாங் ஜியே, தனது தேசிய விளையாட்டு வீரர் விருதை, சிறுவயதில் தான் முன்மாதிரியாகக் கருதிய பேட்மிண்டன் ஜாம்பவான் டத்தோ ஸ்ரீ லீ சோங் வெய்யின் வெற்றியைப் பின்பற்றுவதற்கான கூடுதல் உந்துதலாகக் கருதுகிறார்.
இளம் தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரியாகத் தொடர்ந்து விளங்குவதற்கும், மலேசியர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கும் இந்த விருது ஒரு பெரும் பொறுப்புடன் வருகிறது என்று தாங் ஜியே கூறினார்.
ஈப்போவில் பிறந்த இந்த விளையாட்டு வீரர், அனைத்துலக அரங்கில் வெற்றி பெறுவதற்கான உந்துதலாக, மலேசிய பேட்மிண்டன் ஜாம்பவானை முன்மாதிரி யாகக் கொண்டு வளர்ந்ததை நினைவு கூர்ந்தார்.
“நானும் குழந்தைகளுக்கும் இளைய தலைமுறைக்கும் ஒரு முன்மாதிரியாக ஆக விரும்புகிறேன். அதனால், நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, பெரும் சாதனைகளைப் படைத்து எப்போதும் தொலைக்காட்சி யில் தோன்றிய சோங் வெய்யைப் பார்த்தோம்.
“அவர் ஒரு மலேசிய நாயகனாகவும், மலேசியர்களுக்கான முன்மாதிரிகளில் ஒருவராகவும் ஆனார். அதனால், ஈ வெய்யும் நானும் அவரைப் போல இன்னும் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறோம்,” என்று அவர் இன்று இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.




