அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்ப், 48, தொழிலதிபரும், மாடல் அழகியுமான பெட்டினா ஆண்டர்சனை, 39, நேற்று முன்தினம் இரண்டாவது திருமணம் செய்தார். இந்த திருமண விழா ஜூனியர் டிரம்பின் ஐந்து பிள்ளைகள் உட்பட, 50க்கும் குறைவான விருந்தினர்களுடன் நடந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகனும், தொழிலதிபருமான ஜூனியர் டிரம்ப், வனெசா என்பவரை முதலில் திருமணம் செய்தார்; இத்தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். இவர்களின் திருமண உறவு, 2018ல் முறிந்தது.
அதன்பின், புளோரிடாவின் பாம் கடற்கரையைச் சேர்ந்த மாடல் அழகி பெட்டினா ஆண்டர்சன் உடன் ஜூனியர் டிரம்புக்கு காதல் மலர்ந்தது. இந்த தகவல் கடந்த ஆண்டு இறுதியில் கசிந்தது. இதையடுத்து இருவரும் சட்டப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களின் திருமணம் கரீபியன் தீவு நாடான பஹாமாசில் மூன்று நாள் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை புகழ்பெற்ற லுாயிஸ் மில்லர் டிசைன் நிறுவனம் கவனித்தது. முதலில் வெள்ளை மாளிகையில் திருமண விழா நடத்தலாம் என, டிரம்ப் ஜூனியர் – ஆண்டர்சன் ஜோடி யோசித்தது. ஆனால், ஈரான் தொடர்பான பதற்றம் மற்றும் சர்வதேச நிலைமை காரணமாக பஹாமாசில் தனியார் விழாவாக நடத்த முடிவு செய்தனர்.
இந்த விழாவில் ஜூனியர் டிரம்பின் சகோதரர் எரிக் டிரம்ப், சகோதரியர் இவாங்கா டிரம்ப், டிபனி டிரம்ப் மற்றும் ஜூனியர் டிரம்பின் ஐந்து பிள்ளைகள் உட்பட, 50க்கும் குறைவான நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஈரான் போர் காரணமாக அதிபர் டிரம்ப் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு இறுதியில் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டு ள்ளதாக கூறப்படுகிறது.




