தலாய் லாமாவின் வாரிசு தேர்வு என்பது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் இந்தியா தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது. திபெத் விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியா இதில் தலையிட்டால், அது இருதரப்பு உறவுகளை மேலும் சீர்குலைக்கும் ஒரு “முள்வேலிப் பிரச்சினையாக” மாறும் என்றும் சீனா கூறியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியாவிற்கான சீன தூதர் யூ ஜிங்,
“தலாய் லாமாவின் மறுபிறவி என்பது பல நூற்றாண்டுகளாக சீனாவின் மத்திய அரசின் ஒப்புதலைக் கோரும், நீண்டகால மாக நிறுவப்பட்ட மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளைப் பின்பற்றுகிறது. தற்போதைய 14-வது தலாய் லாமாவும் இந்த நிறுவப்பட்ட செயல்முறையின் மூலமே அங்கீகரிக்கப்பட்டார்.
தலாய் லாமாவின் மறுபிறவி விவகாரம் முற்றிலும் சீனாவின் உள்விஷயமாகும், இதில் வெளித் தலையீடுகள் இருக்கக்கூடாது. “மத்திய திபெத்திய நிர்வாகம்” என்று அழைக்கப்படும் அமைப்பை எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடும் அங்கீகரிக்கவில்லை, மேலும் அதன் தலைமைக்கு திபெத்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டப்பூர்வ தகுதியோ அல்லது மறுபிறவி செயல்முறை குறித்து உரிமை கோருவதற்கான அதிகாரமோ இல்லை.
இத்தகைய அணுகுமுறை நமது இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மைக்கும் மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கும் சாதகமாக பங்களிக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.




