2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய உயர் கல்வித் தேர்வு (STPM) தேர்வில், மொத்தம் 1,336 தேர்வர்கள் 4.00 என்ற முழுமையான ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியை (CGPA) பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 1,266 ஆக இருந்ததை விட 70 தேர்வர்கள் அதிகம்.
இந்த முன்னேற்றம், STPM 2024-ல் 2.85 ஆக இருந்த தேசிய CGPA-வை இந்த ஆண்டு 2.88 ஆக உயர்த்தவும் பங்களித்துள்ளது. இது 2013-ல் STPM தொகுதிமுறைஅறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த சாதனையாகும் என கோஸ்மோ! ஆன்லைன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசிய தேர்வுமன்றத்தின் (MPM) தலைவர் பேராசிரியர் டத்தோ முகமது அமின் முகமது டாஃப், இந்த ஆண்டுக்கான தேசிய CGPA, 2013-ஆம் ஆண்டு STPM தேர்வில் பதிவான 2.57-ஐ விட 12.06 சதவீதம் அதிகமாக உள்ளது என்று கூறினார்.
முழுமையான 4.00 CGPA பெற்ற தேர்வர்களின் விகிதம் கடந்த ஆண்டு 3.06 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 3.50 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். “2024-ஆம் ஆண்டு STPM தேர்வுடன் ஒப்பிடும்போது, 3.75, 3.00, 2.75 மற்றும் 2.00 மற்றும் அதற்கு மேற்பட்ட CGPA-க்களைப் பெற்ற தேர்வர்களின் சதவீதமும் அதிகரித்துள்ளது,” என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற 2025 STPM தேர்வு முடிவுகள் அறிவிப்பு விழாவில் கூறினார்.
எழுதிய ஐந்து பாடங்களிலும் 5A கிரேடுகளைப் பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை 2024-ல் 53-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 60-ஆக அதிகரித்துள்ளது என்று முகமது அமின் கூறினார். 4A கிரேடுகளைப் பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கையும் 1,228-லிருந்து 1,285-ஆக அதிகரித்துள்ளது.




