Vimarsagan Media

Home » Malaysia » வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரிக்க வேண்டும்

வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரிக்க வேண்டும்

மலேசியாவோடு தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரித்து தண்டனை வழங்க வழிவகுக்கும் ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்த) மசோதா 2026’ மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வெளிநாடுகளில் குற்றம் செய்துவிட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப நினைப்பவர்களை முடக்கவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு ள்ளதாகச் சட்ட, நிறுவன சீர்திருத்தத் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

இந்தச் சட்டத் திருத்தத்தின்மூலம், வெளிநாட்டில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் மலேசியாவிற்குள் நடந்ததாகவே கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்கள் தொடர்பாக இரு நாடுகளிலும் புகார்கள் அளிக்கப்பட்டால், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தப்பிக்காதவாறு இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து முடிவெடுப்பர்.

விசாரணையின் அடிப்படையில் ஒருவரை நாடுகடத்தும் இறுதி முடிவை அரசாங்கம் எடுக்காது, நீதிமன்றமே தீர்மானம் செய்யும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அனைத்துலக விதிகளுக்கு மதிப்பளித்து மலேசியா இந்தச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

Scroll to Top