Vimarsagan Media

Home » World » யாத்திரை சென்ற பக்தர்கள் 52 பேர், விசா இல்லாமல் நேபாளத்தில் தவித்து வருவதாக தகவல் !

யாத்திரை சென்ற பக்தர்கள் 52 பேர், விசா இல்லாமல் நேபாளத்தில் தவித்து வருவதாக தகவல் !

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் 52 பேர், முறையான விசா இல்லாமல் நேபாளத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அவசர ஆலோசனை வழங்கியுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ளது கைலாஷ். ஹிந்து, பவுத்தம் உள்ளிட்ட மதத்தினர் கைலாஷ் பனிமலையை புனிதமாக வழிபடுகின்றனர். குறிப்பாக, நம் நாட்டில் உள்ள ஹிந்துக்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக நேபாளம் வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரை சமீபத்தில் தொடங்கிய நிலையில், கடந்த 20ம் தேதி முதல் குழு இந்திய – சீன எல்லையான நாதுலா பாஸ் என்ற இடத்தை கடந்து சென்றது.

இந்நிலையில், நேபாளம் வழியாக சென்ற பக்தர்களில் 52 பேரிடம் சீன நாட்டின் விசா மற்றும் நுழைவு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. தனியார் பயண நிறுவனங்கள் அதற்கான முழுமையான ஏற்பாடுகளை செய்யாததால், பக்தர்கள் 52 பேரும், நேபாளத்திலேயே தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பான அனைத்து பயண ஆவணங்களும் கிடைக்காத வரை, பக்தர்கள் யாரும் புறப்பட்டுச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

யாத்திரை புறப்பட்டுச் சென்றதும், பாதி வழியில் விசா மற்றும் நுழைவு அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம் என தனியார் பயண நிறுவனங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை பக்தர்கள் நம்ப வேண்டாம். யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் பயண நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை பக்தர்கள் உறுதி செய்து பின்னர் பயணத்தை தொடங்க வேண்டும்.

தற்போது முறையான விசா மற்றும் நுழைவு அனுமதி இல்லாமல் நேபாளத்தின் காத்மாண்டுவில் தவித்து வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தனியார் பயண நிறுவனங்கள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top