Vimarsagan Media

Home » Malaysia » பொதுத்தேர்தல் இப்போது தேவையில்லை, பொருளியல் வளர்ச்சியே அவசியம்: பிரதமர் அன்வார்

பொதுத்தேர்தல் இப்போது தேவையில்லை, பொருளியல் வளர்ச்சியே அவசியம்: பிரதமர் அன்வார்

மலேசியாவில் தற்போது பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை யில்லை, பொருளியலில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை மீண்டும் நிராகரித்ததோடு, தமது அரசாங்கத்திற்கு அதன் மக்கள் ஆணையை நிறைவேற்றுவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில், அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மொத்தம் உள்ள 56 தொகுதிகளில் எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. தேசிய முன்னணி தேர்தலில் 48 இடங்களைக் கைப்பற்றியது.

கடந்த 2025ஆம் ஆண்டு சாபா மாநிலத் தேர்தலில் ஒரு இடத்தை மட்டுமே பெற்ற பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஜொகூர் தேர்தல் தோல்வி அடுத்தகட்டப் பின்னடைவாக அமைந்துள்ளது.

தேசிய முன்னணிக் கூட்டணி தனித்துப் போட்டியிட்டதால் ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பிரதமர் அன்வார் அக்டோபர் மாதத்திற்குள் பொதுத்தேர்தலை அறிவிக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. எனினும், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் 2028 பிப்ரவரி வரை உள்ளது.

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ளது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மீண்டும் தேசிய முன்னணிக் கூட்டணியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Scroll to Top