பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று காலமான தனது மூத்த சகோதரர் இட்ருஸ் இப்ராகிமின் மறைவு குறித்து ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார்.
“மலேசியாவுக்குத் திரும்பிக்கொண்டி ருந்த போது, எனது சகோதரர் இட்ருஸ் இப்ராகிம் காலமானார் என்ற மனதை உலுக்கும் செய்தியை நான் அறிந்தேன்.
“என் வாழ்நாள் முழுவதும் பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஒருவர் இப்போது நம்மை விட்டுப் பிரிந்துவிட்ட நிலையில், எனக்கு ஏற்படும் இழப்பு உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. இந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது என் இதயம் எவ்வளவு கனமாக இருக்கிறது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
“அவரது இறுதித் தருணங்களில் அவருடன் இருக்க முடியாமல் போனதை எண்ணி வருந்துகிறேன்; இருப்பினும், நாங்கள் ஒருபோதும் எதிர்கொள்ளத் தயாராக இல்லாத இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்ள முயலும் அதே வேளையில், இதனை மனதார ஏற்றுக்கொள்கிறேன்,” என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இட்ருஸ் விட்டுச் சென்ற நினைவுகள் மற்றும் அவர் காட்டிய அன்பிற்காக அன்வார் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், அவை தனது குடும்பத்தினரின் நினைவு களிலும் இதயங்களிலும் என்றும் நிலைத்திருக்கும் என்றும் கூறினார்.




