நெகிரி செம்பிலானில் அதிகரித்து வரும் அரச குடும்ப தகராறு குறித்து பல புகார்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இதனை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுதியன் இஸ்மாயில் தெரிவித்தார்.
செயல்பாட்டு விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்புப் படைகள் பொது ஒழுங்கைப் பேணுவதிலும், தெரு மோதல்களைத் தவிர்ப்பதிலும், பொதுமக்களைப் பாதுகாப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சைஃபுதீன் கூறியதாக என்.எஸ்.டி செய்தி வெளியிட்டுள்ளது.
கூட்டங்கள் மோதல்களுக்கு வழிவகுக் காமல் இருப்பதை உறுதிசெய்ய, காவல் துறை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
“அவர்கள் எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து வருகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
விசாரணை ஆவணங்களை மேலதிக அறிவுறுத்தல்களுக்காக சட்டமா அதிபரின் அலுவலகத்திற்குச் சமர்ப்பிப்பதா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பு, தங்கள் விசாரணையை முடிக்கும் பொறுப்பை முழுவதுமாக காவல்துறையிடமே விட்டுவிடுவதாக சைஃபுதீன் உறுதிப்படுத்தினார்.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எனக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலைப்பாடு குறித்துப் பேசிய சைஃபுதீன், மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சியின் கீழ், பரம்பரை ஆட்சியாளரைப் பதவியிலிருந்து நீக்கும் எந்தவொரு முயற்சியையும் பிரதமர் மிகவும் தீவிரமான ஒரு விஷயமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.




