Vimarsagan Media

Home » Malaysia » மலாக்கா தேர்தலுக்கான பேச்சு வார்த்தையில் பக்கத்தான் – பெர்சத்து

மலாக்கா தேர்தலுக்கான பேச்சு வார்த்தையில் பக்கத்தான் – பெர்சத்து

16வது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், 28 இடங்களைக் கொண்ட மலாக்கா மாநிலச் சட்டமன்றம் செப்டம்பர் 23ஆம் தேதி கலைக்கப்பட்டது.

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் நிலையில், பெர்சத்து கட்சியுடனான பேச்சுவார்த்தையில் அடுத்த வாரத்தி லேயே முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி இன்று (அக்டோபர் 1) தெரிவித்தார்.

பக்கத்தான் ஹராப்பான் பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்றும் அனைத்து சாத்தியக்கூறுகளும் பரிசீலனையில் உள்ளன என்றும் அமிருடின் கூறினார்.

பக்கத்தான் ஹரப்பானுக்கும் பெர்சத்துவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்துக் குறிப்பாகக் கேட்கப்பட்டபோது, “​அடுத்த வாரத்திற்குள் எங்களிடம் ஒரு முடிவு அல்லது தீர்வு கிடைக்கலாம் என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைகளில் பக்கத்தான் ஹரப்பானின் உடனடி முன்னுரிமை தேர்தலில் வெற்றி பெறுவதே என்று குறிப்பிட்ட சிலாங்கூர் முதல்வர், அதேவேளையில் எட்டப்படும் எந்தவோர் ஏற்பாடும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“இப்போதைக்கு, அனைத்து சாத்தியக் கூறுகளும் இன்னும் திறந்தே இருப்பதாக நான் கருதுகிறேன். பேச்சுவார்த்தைக்கான கதவும் திறந்தே உள்ளது,” என்றார் அவர். “அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், எங்கள் முன்னுரிமை மிகவும் எளிமையானது. முதலாவது முன்னுரிமை, எங்கள் தரப்பின் வெற்றி. அதேவேளையில், ஒவ்வொரு தரப்பிற்கும் அதற்கே உரிய நலன்களும் உள்ளன.

“இரண்டாவதாக, நாங்கள் அமைக்கவிருக்கும் கூட்டணி மூலம் மூலம் மக்களின் நலன்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட முடியும் என்பது முக்கியமானது,” என்று டமான்சாராவில் உள்ள சன்வே மருத்துவ மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

Scroll to Top