வரும் 2048ஆம் ஆண்டுக்குள் மலேசியா மூப்படைந்த நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது அதற்கு முழுமையாகத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் மட்டுமே உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2048க்குள் மலேசியா மூப்படைந்த நாடாக மாறுவது, பல வளர்ந்த நாடுகள் அந்தக் கட்டத்தை எட்டும் காலத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிட்ட அளவு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேசிய அளவில் தயாராய் இருப்பதன் தொடர்பில் அரசாங்கத்துக்குக் காலம் குறைவாக இருப்பதாக மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நாசர் கூறியுள்ளார். பிரான்சுக்கு அதற்கான காலம் 115 ஆண்டுகளாகவும் ஆஸ்திரேலியாவுக்கு 73 ஆண்டுகளாகவும் அமெரிக்காவுக்கு 69 ஆண்டுகளாகவும் இருப்பதாக அவர் சுட்டினார்.
மூப்படையும் நாடாக மாற்றம் மலேசியா 2021ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக மூப்படையும் நாடு என்ற நிலையை அடைந்ததாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஏழு விழுக்காட்டினர் 65 வயது அல்லது அதையும் தாண்டியவர்களாக இருந்ததைத் தொடர்ந்து அந்நிலை உருவானது.
“தற்போதைய கணிப்புகளின்படி 2048க்குள் மலேசியா மூப்படைந்த நாடாக மாறும். அப்போது வயதானவர்களின் விகிதம் 14 விழுக்காடாக உயரும். பிறகு 2060க்குள் மிக மூப்படைந்த நாடாக மாறும். அப்போது அவ்விகிதம் 20 விழுக்காட்டைத் தொடும்,” என்று அக்மல் நஸ்ருல்லா விளக்கினார்.




