ஆகஸ்ட் 31 நிலவரப்படி, தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) 1.16 மில்லியன் கடன் பெறுநர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை RM10.7 பில்லியனாக உள்ளது என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்து ள்ளது. வசூலை அதிகரிக்க அமலாக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அமைச்சு கூறியது.
டத்தோ ஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் (BN-ஜெலேபு) அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வசூலை மேம்படுத்த PTPTN அரசு முகமைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்தது.
பிடிபிடிஎன்-இன் நிதிச் சூழலைக் கருத்தில் கொண்டு, உண்மையான தேவை உள்ளவர்களுக்குக் கடன் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அது கூறியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 நிலவரப்படி நிலுவைத் தொகை RM11.18 பில்லியனாக இருந்ததாக பிடிபிடிஎன் தலைவர் டத்தோ ஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம் கடந்த அக்டோபரில் தெரிவித்திருந்தார்.
கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதில் உண்மையான சிரமங்களை எதிர்கொள்ளும் கடன் பெறுநர்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என்று அமைச்சு கூறியது.
“தங்கள் நிதி வசதிக்கு ஏற்ப கடன் திருப்பிச் செலுத்தும் முறையை மறுசீரமைக்கவோ அல்லது பிடிபிடிஎன் அனுமதிக்கும் நெகிழ்வுத்தன்மையின் அடிப்படையில் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிப்போடவோ, கடன் பெறுநர்கள் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்துவதை பிடிபிடிஎன் எப்போதும் வரவேற்கிறது,” என்று அது குறிப்பிட்டது.




