கடந்த மாதம் நடைபெற்ற அம்னோ பொதுக்கூட்டத்தில் கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக, சிப்பாங் அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோ நூராஸ்லி சைட் மீது வியாழக்கிழமை இங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
நீதித்துறை நடுவர் நூருல் இசா ஹசன் பஸ்ரி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 48 வயதான நூராஸ்லி தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.
செப்டம்பர் 12 அன்று காலை 11.20 மணிக்கு, இங்குள்ள ஜலான் துன் இஸ்மாயிலில் உள்ள வேர்ல்ட் டிரேட் சென்டரின் (World Trade Centre) தேவான் மெர்டேக்காவில் நடைபெற்ற அம்னோ பொதுக்கூட்டத்தில், கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ் திரிகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்து, கிறிஸ்தவர்களின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




