கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் சட்டவிரோதப் பொருட்களைக் கடத்த தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தும் வகையில் தங்கள் உத்திகளை மாற்றிக்கொண்டதாக நம்பப்படுகிறது.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குனர் டத்தோ உசேன் உமர் கான் கூறுகையில், இந்தக் கும்பல்கள் தனியார் விமானங்களைப் பயன் படுத்துவதற்கு முன்பு மாற்று வழிகளைப் பயன்படுத்த முயன்றபோது, அவர்களின் செயல்பாட்டு முறையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை காவல்துறை கண்டறிந் ததாகத் தெரிவித்தார்.
KLIA-வில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பிறகு, இந்தக் கும்பல்கள் ஈப்போ (Ipoh) விமான நிலையத்தைப் பயன்படுத்தி யதற்கான அறிகுறிகள் இருந்ததாக அவர் கூறினார். “நாங்கள் KLIA-வில் பாதுகாப்பைக் கடுமையாக்கியபோது, அவர்கள் தங்கள் உத்திகளை மாற்றத் தொடங்கினர். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சுபாங்கில் கைது செய்யப்பட்ட நால்வரில் தனியார் ஜெட் விமான உரிமையாளரும் ஒருவர்
அந்த நிறுவனம் ஜூலை மாதம் தனது செயல்பாடுகளைத் தொடங்கியதாகவும், மிக முக்கியப் பிரமுகர்கள் (VVIP), சரக்குகள் மற்றும் சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு விமானச் சேவைகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
“இதுவரை இந்நிறுவனம் ஒன்பது முன்பதிவுகளைப் பெற்றுள்ளது; அவற்றில் பெரும்பாலான சேவைகள் VVIP மற்றும் மருத்துவத் தேவைக்கான விமானப் பயணங்களாகும். “இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை, லாவோஸிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காகவே அந்த விமானம் பயன்படுத்தப்படுவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் உரிமையாளருக்கும் அந்தக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா அல்லது நிறுவனத்தின் சேவைகள் வேறு தரப்பினரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருவதாக ஆணையர் உசேன் கூறினார்.




