அமெரிக்காவின் கிராமப்புற டென்னசி பகுதியில் உள்ள ‘பூன் ஏரி’ என்ற இடத்தில், பாறையில் மோதி மூழ்கிக்கொண்டிருந்த படகில் தவித்த 4 டீன்-ஏஜ் இளைஞர்களை 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று உடன்பிறப்புகள் மிகவும் சாதுரியமாக மீட்டு சாதனை படைத்துள்ளனர். கடும் இடி மின்னலுடன் கூடிய புயல் தாக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு இந்த அதிரடி மீட்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஸ்கவுட் பயிற்சியில் தாங்கள் கற்றுக் கொண்ட திறமைகளைப் பயன்படுத்தி இந்தச் சிறுவர்கள் நிகழ்த்திய வீர தீரச் செயல் தற்போது உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
டெக்லான் ஜாக்சன் (10), கோர்மக் ஜாக்சன் (12) மற்றும் எல்சா ஜாக்சன் (13) ஆகிய மூன்று சிறுவர்களும் பூன் ஏரி பகுதியில் உள்ள தங்களது தாத்தா-பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு வந்திருந்தனர். அப்போது டெக்லானும் எல்சாவும் ஏரிக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென ஏரியின் நடுப்பகுதியில் இருந்து ஃபாக்ஹார்ன் சத்தமும், “காப்பாற்றுங்கள்!
எங்களைக் காப்பாற்றுங்கள்!” என்ற அலறல் சத்தமும் கேட்டது. உற்றுப் பார்த்தபோது, ஏரியின் நடுவே நான்கு இளைஞர்கள் கைகளை அசைத்து உதவி கோருவதை அவர்கள் கண்டனர். உடனடியாக டெக்லான் தனது தாத்தா-பாட்டியிடம் விபரத்தைக் கூற ஓடினான். அதற்குள் மற்ற இரு உடன்பிறப்புகளும் தங்களது சிறிய ‘பாண்ட் பிராவ்லர்’ மீன்பிடிப் படகை மீட்புப் பணிக்காகத் தயார் செய்தனர்.




