லாபுவான், டிசம்பர் 5: மெனும்போக் நோக்கி பயணித்த 38 பேரை ஏற்றிச் சென்ற ஒரு விரைவு படகு நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடுக்கடலில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக படகு கரையோரத்துக்கு திருப்பி விடப்பட்டதால், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
லாபுவான் படகு முனையத்தை நிர்வகிக்கும் எல்டிஏ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நூர் ஹலீம் ஜைனி, இந்தச் சம்பவம் பயணத்தின் நடுவில் திடீரென ஏற்பட்டதாக தெரிவித்தார்.
“படகு ஓட்டுநர் உடனடியாக நிலைமையை உணர்ந்து, கப்பலை அருகிலுள்ள கடற்கரையை நோக்கி திருப்பினார். இதனால் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது,” என அவர் கூறினார்.
தீ வேகமாக பரவியிருந்தாலும், அனைத்து பயணிகளும் காயமின்றி கரைசேர்ந்தனர். அதே சமயம், அவர்களின் தனிப்பட்ட உடைமைகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக நூர் ஹலீம் கூறினார்.
தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் படகு அனுபவித்த சேதத்திற்கான மதிப்பீடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவசரகால மீட்புப் பிரிவினரும் உள்ளூர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பகுதியை பாதுகாத்து முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.



