கடந்த திங்கட்கிழமை கிள்ளாங்கில் உள்ள மேரு காவல் நிலையத்தில் நடந்த சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடக்கு கிள்ளாங்கில் உள்ள மேரு காவல் நிலையத்தில் இரவு 9.40 மணியளவில் மூன்று பேர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக வடக்கு கிள்ளாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதற்கு முன்பு, மேலும் ஐந்து பேர் திடீரென அந்த இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் புகார்தாரரை இரும்பு கம்பியால் அடித்தார். இந்த கலவரம் காரணமாக, சந்தேக நபர்கள் அனைவரும் தப்பிச் செல்வதற்கு முன்பு, காவல் நிலையத்தில் இருந்த ஒரு தொலைக்காட்சியும் சேதமடைந்தது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
போலீசாரின் விரைவான நடவடிக்கை யின் விளைவாக, விசாரணைக்கு உதவ 28 முதல் 41 வயதுக்குட்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையி லான தவறான புரிதலில் இருந்து உருவானது என்று நம்பப்படுகிறது என்று ஆரம்ப விசாரணையில் கண்டறியப் பட்டது,” என்று அவர் கூறினார்.




