Vimarsagan Media

Home » Malaysia » நாடறிந்த எழுத்தாளர் சீ முத்துசாமி இன்று காலமானார்

நாடறிந்த எழுத்தாளர் சீ முத்துசாமி இன்று காலமானார்

நாடறிந்த எழுத்தாளர் கடாரத்தின் எழுத்துச் சிற்பி சீ முத்துசாமி இன்று காலமானார். சீ. முத்துசாமி பிப்ரவரி 22, 1949 அன்று கெடாவில் சீரங்கன்-முத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். சீ.முத்துசாமி ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். இடையிலேயே அரசாங்க பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, காப்புறுதி முகவராகப் பணியைத் தொடர்ந்தார்.இவருக்கு மனைவியும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

சீ. முத்துசாமி இடைநிலைப்பள்ளியில் பயிலும்போதே ஆங்கில இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியிருந்தார். ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வந்த ஜெயகாந்தனின் புனைவுகளை வாசித்ததன் வழி தமிழ் இலக்கிய வாசிப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1971-ல் தனது 22-ஆவது வயதில் பீடோங்கில் நடந்த சிறுகதை போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெற்றதன் வழி தொடர்ந்து புனைவிலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1978-ல் ‘இரைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் 1980-ல் ‘விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை’ என்ற குறுநாவலையும் எழுதி வெளியீடு செய்தவர் 1980-களின் தொடக்கத்தில் முழுமையாக இலக்கியச் சூழலில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராயிரத்தின் தொடக்கத்தில் மீண்டும் எழுதத் தொடங்கினார். 2006-ல் ‘மண் புழுக்கள்’ நாவலுக்குக் கிடைத்த வரவேற்பும் கவனமும் அவரை மீண்டும் உற்சாகமாக எழுதத் தூண்டியது.

எம். ஏ. இளஞ்செல்வன், நீலவண்ணன் ஆகியோருடன் இணைந்து ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றினார். ஆகஸ்டு 25, 1979-ல் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை அவ்வியக்கம் வழி ஏற்பாடு செய்தார். 2006-ல் சுங்கைப் பட்டாணியில் மாநில எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நூல் வெளியீடுகளையும் புத்திலக்கிய அறிமுகக் கூட்டங்களையும் நடத்தினார். சீ.முத்துசாமி நாய்கள் வளர்ப்பதிலும், புதிய இனங்களை உருவாக்குவதிலும் ஈடுபாடு கொண்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Scroll to Top