சிட்னி விமான நிலையத்தில் பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இறக்குமதி செய்ய முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் மீது ஆஸ்திரேலிய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது என சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று தாய்லாந்திலிருந்து விமானத்தில் சிட்னிக்கு வந்திறங்கிய 66 வயதான அந்த நபரின் பயணப் பெட்டி சோதனை க்கு அனுப்பப்பட்டதாக ஆஸ்திரேலிய கூட்டரசு காவல்துறையும் (AFP) ஆஸ்திரேலிய எல்லைப் படையும் (ABF) இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
அந்த நபரின் பயணப் பெட்டியை எக்ஸ்-ரே செய்ததில் அதில் குறைபாடு கள் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், ‘வாசனைப் பொடி’ என முத்திரையிடப் பட்டிருந்த 10 புட்டிகளில் 5 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
அந்த நபர் கைது செய்யப்பட்டு, எல்லைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட போதைப்பொருள் வணிக அளவில் இறக்குமதி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப் படலாம்.
தாய்லாந்திலிருந்து ஆஸ்திரேலியா விற்கு பயணப் பெட்டியை கூரியர் மூலம் கொண்டு செல்வதற்காக, பணம் பெற்றுக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் தான் ஆள்சேர்க்கப்பட்டதாக அந்த நபர் அதிகாரிகளிடம் கூறியதாக AFP மற்றும் ABF தெரிவித்துள்ளன. தடயவியல் பரிசோதனைக்காக இரண்டு கைபேசிகள் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டன.




