Vimarsagan Media

Home » Malaysia » முன்னாள் தடகள வீரர் சரவணன் மோட்டோ நியூரோன் நோயால் அவதி

முன்னாள் தடகள வீரர் சரவணன் மோட்டோ நியூரோன் நோயால் அவதி

1998 காமன்வெல்த் போட்டிகளில் நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் தடகள வீரர் ஜி. சரவணனின் அவலநிலை, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

56 வயதான சரவணன், கடந்த சில ஆண்டுகளாக மூளை மற்றும் தண்டுவடத்திலுள்ள இயக்க நரம்பு செல்களைப் பாதிக்கும் மோட்டோ நியூரோன் நோய் (MND) என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

அவரது குடும்பத்தின் மீதான சுமையைக் குறைக்க, குறிப்பாக சிகிச்சை மற்றும் மருந்துச் செலவுகளுக்கு உதவ, தங்கள் தரப்பு நிதி திரட்ட முயற்சி செய்து வருவதாக அறக்கட்டளையின் தலைவர் டத்தோ நூருல் அரிஃபின் அப்துல் மஜீத் கூறினார்.

முன்னாள் பெருநடை வீரரான சரவணனுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து, நாங்கள் அவரது முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறோம். , தற்போது அவர் படுக்கையிலேயே முடங்கி, பேச முடியாத நிலையில் உள்ளார்.

“அவரால் ஒரு குழாய் வழியாக மட்டுமே சாப்பிட முடிகிறது, மேலும் அவர் எல்லா நேரமும் சுவாசக் கருவியையே சார்ந்திருக்கிறார். அவரது இதயம் இரண்டு நிமிடங்கள் நின்றுபோன பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கியது,” என்று இன்று இங்கு தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிதியிலிருந்து தனிநபர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட RM100,000 நன்கொடையை, கடந்த புதன்கிழமை புக்கிட் மெர்டாஜமில் உள்ள முன்னாள் தடகள வீரரின் இல்லத்தில் வைத்து, அறக்கட்டளை சரவணனின் குடும்பத்தினரிடம் வழங்கியதாகத் தெரியவருகிறது.

முன்னதாக, சரவணனின் அவலநிலை பிரதமர் டத்தோ செரி அன்வர் இப்ராஹிமின் கவனத்தையும் ஈர்த்தது. அவர், முன்னாள் தடகள வீரர் குணமடைய பிரார்த்தனை செய்வது உட்பட உதவிகளை வழங்கினார்.

Scroll to Top