கடந்த புதன்கிழமை கூலிமில் உள்ள கூலிம் ஹை-டெக் பார்க் (KHTP) தொழிற்சாலை கட்டுமான தளத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக, ஒரு இணையதள பத்திரிகையாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதை காவல்துறை உறுதி செய்துள்ளது. கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா கூறுகையில், அவர்களில் எட்டு பேர் கடந்த சனிக்கிழமையும், மற்ற இருவர் நேற்றும் தடுத்து வைக்கப் பட்டனர்.
20 முதல் 40 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு, தனியார் சொத்து அல்லது நிலத்தில் குற்றவியல் அத்துமீறல் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். “மார்ச் 26 அன்று, பிற்பகல் சுமார் 3.15 மணியளவில், எட்டு கார்களில் வந்த சுமார் 10 முதல் 12 நபர்கள், கட்டுமானத்தில் உள்ள தொழிற்சாலை வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர்.
“பணியில் இருந்த இரண்டு பாதுகாப்பு காவலர்கள் அவர்களை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றனர், ஆனால் அவர்கள் புறக்கணிக்கப் பட்டனர்.” “பல உள்ளூர்வாசிகள் இன்னும் அங்கு வேலைக்குத் தகுதி பெற்றிருக்கும்போது, வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவது குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பினர்,” என்று பெர்னாமா அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினர்
முன்னதாக தடுத்து வைக்கப்பட்ட எட்டு நபர்கள் காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியல் உத்தரவுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகளைச் செய்தி சேகரித்தபோது அத்துமீறி நுழைந்த தாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தினதந்தி என்ற தமிழ் செய்தி இணையதளத்தின் பத்திரிகையாளர் காளிதாஸ் சுப்பிரமணியம் கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD) காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.




