Vimarsagan Media

Home » World » சம்பள வேறுபாடு – நிரந்தரப் பணி மருத்துவர்கள் சிங்கைக்கு படையெடுப்பு

சம்பள வேறுபாடு – நிரந்தரப் பணி மருத்துவர்கள் சிங்கைக்கு படையெடுப்பு

மருத்துவப் படிப்பைப் முடிக்கும் புதிய மலேசிய பட்டதாரிகள் சிங்கப்பூரை நோக்கி ஈர்க்கப்படுவதால் நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை பணியாளர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் சுகாதார அமைச்சு வழங்கிய 5,000 பயிற்சி மருத்துவப் பணியிடங்களில், வெறும் 529 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 10.5 விழுக்காடு மட்டுமே என்று எம்பிஎஸ்பி எனப்படும் மலேசியாவின் முக்கிய நிதி நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

இங்குள்ள ஆள்சேர்ப்பு முகவர்கள், மருத்துவ மாணவர்கள் பணி அனுபவம் பெறும் வரை காத்திருக்காமல், தற்போது இறுதி ஆண்டு மாணவர்களை நேரடியாகக் குறி வைக்கின்றனர். ‘சிறந்த உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், தங்களது இறுதி மருத்துவப் படிப்பிற்கான (MBBS) தேர்வுகளை எழுதுவதற்கு முன்பே ஆள்சேர்ப்பு முகவர்கள் அவர்களை அணுகுகின்றனர்,” என்று அந்த ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கிறது.

சம்பள வேறுபாடு, நிரந்தரப் பணி போன்றவையே மலேசிய மருத்துவர்கள் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்க முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன. குறிப்பாக, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பிற்குச் சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து, இங்கிருந்து வெளிநாடு செல்லத் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

Scroll to Top