Vimarsagan Media

Home » Malaysia » இரண்டு மாதக் குழந்தைக்கு மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

இரண்டு மாதக் குழந்தைக்கு மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

இம்மாதத் தொடக்கத்தில் கம்போங் புக்கிட் குடாவில் உள்ள ஒரு வீட்டில், தனது இரண்டு மாதக் குழந்தையைக் மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் மெலிசா சியா முன்னிலை யில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அஸ்மி அமாத்திடம் இருந்து எந்தவிதமான வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

வழக்கின் விவரங்களின்படி, மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு மாதப் பெண் குழந்தை துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுவதாக, லபுவான் மருத்துவமனை மே 9 அன்று காவல்துறைக்குத் தகவல் அளித்தது.

சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அக்குழந்தை பின்னர் இறந்தது. பிரேதப் பரிசோதனையில், குழந்தைக்கு மழுங்கிய ஆயுதத்தால் ஏற்பட்ட கடுமையான தலைக்காயங்களும், பல உடைந்த விலா எலும்புகளும் இருந்தது தெரியவந்தது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் அஸ்மி மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இப்பிரிவின் கீழ், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரணதண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படும். வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஜூன் 23 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

Scroll to Top