மலேசிய எல்லைகளில் இயங்கும் கணினிகளில் வியாழக்கிழமை (மே 28) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
கணினி கட்டமைப்பு முழுவதும் காலை 4.30 மணிமுதல் 9.30 மணிவரை ஏறத்தாழ ஐந்து மணிநேரம் இயங்கத் தவறியது. உள்ளூர்வாசிகளையும் வெளிநாட்டி னரையும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கணினியின் உதவியின்றி நேரடியாகக் கடப்பிதழ்களை சோதித்து சாவடிகளைக் கடக்கவைக்க வேண்டி யிருந்தது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியும் இதேபோன்ற தொழில்நுட்பக் கோளாறு எல்லைச் சாவடிகளில் 2 மணிநேரம் ஏற்பட்டு பலரை அவதிக்குள் ளாக்கியது. ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட இடைவெளிக்குள் இரண்டாம் முறையாக இது நடந்துள்ளது.
“இயந்திரக் கோளாறு காலை 5 மணிக்கு ஏற்பட்டு காலை 8.45 மணிவரையில் நீடித்தது. மலேசியக் குடிநுழைவு செயல்பாட்டு கட்டமைப்பின் (MyIMMs) தரவு நிலையத்தில் நிகழ்ந்த தொழில்நுட்பப் பிரச்சினைகள் அதற்குக் காரணம்,” என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் சாகாரியா ஷாபான் விளக்கமளித்தார்.
“சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு, செயல்முறை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது. கட்டமைப்பு அத்துமீறப்படவில்லை. ‘மைஐஎம்எம்’ 30 ஆண்டுகளாக இயங்கிவரும் மிகவும் பழைய செயல்முறைத் திட்டமாகும். அதில் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனவே மீண்டும் இதுபோன்ற கோளாறு ஏற்படாது என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது,” என்று அவர் கூறினார்




