பத்து பஹாட்: யோங் பெங்கில் உள்ள 70 ஆண்டுகள் பழமையான மசீச கட்டிடம், இன்று இரவு ஜாலான் நிபா சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்தது.
யோங் பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி முஹம்மது அமீர் ஷா ஹம்ஸா கூறுகையில், இரவு 8.28 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
இந்த மீட்புப் பணியில், ஆயர் ஹித்தாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் உதவியதாகவும், இதில் இரண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் (FRT) மற்றும் ஒரு அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) வாகனம் பயன்படுத்தப் பட்டதாகவும் அவர் கூறினார்.
“கட்டிடத்தின் 80 சதவீதப் பகுதி தீயில் எரிந்தது. ஒரே ஒரு குழாய் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முழுமையாக அணைக்கப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.




