Vimarsagan Media

Home » India » சுடுகாடுகள் அருகே டாஸ்மாக் வைக்கலாம்: முதல்வருக்கு நடிகர் பார்த்திபன் யோசனை

சுடுகாடுகள் அருகே டாஸ்மாக் வைக்கலாம்: முதல்வருக்கு நடிகர் பார்த்திபன் யோசனை

டாஸ்மாக் கடைகளை ஊர்களின் ஒதுக்குப்புறத்தில் சுடுகாடுகளின் அருகே வைக்கலாம் என நடிகர் பார்த்திபன் யோசனை இதுகுறித்து விடியோ வெளியிட்டுள்ள பார்த்திபன், “எம்ஜிஆர் காலத்திலிருந்தே டாஸ்மாக்கை ஒழிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், எந்த ஆட்சியாக இருந்தாலும் இதனை ஒழிக்க முடிய வில்லை. அப்படியெனில், இது ஒரு தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது.

தினசரி உழைக்கும் வர்க்கத்தினருக்கு வழங்கப்படும் கூலி, மகிழ்வாக இல்லாததால், மாலையில் வீடு திரும்பும்போது அவர்களுக்குள் ஒரு வெறுமை வந்து விடுகிறது. இதனால், உடல் வலிக்கு தற்காலிகத் தீர்வாக டாஸ்மாக் நோக்கிச் செல்கின்றனர்.

டாஸ்மாக் விவகாரத்தில் அணுகவேண்டிய முறை வேறுவிதமாக இருக்க வேண்டும்.டாஸ்மாக்கை மூடினால், கள்ளச்சாராய வியாபாரம் பெருகும் அபாயமும், அரசுக்குக் கிடைக்கக் கூடிய வருமானம் போன்ற பிரச்னைகளும் உள்ளன.

டாஸ்மாக்கை மையமாக வைத்து ஆண்டாள் என்ற படம் எடுக்கவிருந்தேன். ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் சுடுகாடு அல்லது மின்தகனம் இருக்கும் பகுதிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகளை நிறுவினால், மக்களுக்கு மனரீதியான ஒருவகை எண்ணங்கள் வரும். அதாவது, கடைசியாக செல்லும் இடத்துக்கு (சுடுகாடு) இப்போதே வருகிறோமோ என்ற எண்ணமோ பயமோ வரலாம்.

சிகரெட், மது பாட்டில்களில் ‘உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் இருப்பது போல், இந்த நடவடிக்கையும்ம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

இதனால், வருமானமும் கெடாது; ஊருக்குள் நிகழும் தகராறுகளும் குறையும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லையே. இது ஒரு சிறு யோசனையே” என்று தெரிவித்துள்ளார்.

Scroll to Top