மலேசிய மனநல மருத்துவ சங்கத்தின் நிறுவனத் தலைவரான டாக்டர் எம். மகாதேவன், தனது 96-வது வயதில் காலமானார்.மலேசியாவில் “நவீன மனநல மருத்துவத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் மகாதேவன், இதற்கு முன்னர் அரசாங்கத்தின் தலைமை மனநல மருத்துவராகவும் பணியாற்றி யுள்ளார்.
செப்டம்பர் 9, 1929 அன்று பிறந்த மகாதேவன், கோலாலம்பூரில் வளர்ந்து, செயின்ட் ஜான்ஸ் நிறுவனத்தில் கல்வி பயின்றார். பின்னர், 1961-ல் இந்தியாவின் பெங்களூரில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார்.
அதன்பிறகு, டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியின் மனநல மருத்துவப் பேராசிரியரான ஜான் டன்னுடன் இணைந்து பணியாற்ற அவர் அழைக்கப்பட்டார். அங்கு அவர், குறிப்பாக ஹிப்னாசிஸ் துறையில், இத்துறையில் மேலும் பல முன்னேற்றங்களைச் செய்தார்.
சர்வதேச உளஉடல் மருத்துவக் கல்லூரியின் ஆசியப் பிரிவின் முதல் மலேசியத் தலைவராக இருந்த மகாதேவனின் நினைவாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு பயண ஆய்வு உதவித்தொகைக்கு பெயரிட்டுள்ளது.
அவர் பேராக், தஞ்சோங் ராம்புட்டானில் உள்ள மத்திய மனநல மருத்துவ மனையின் முதல் இயக்குநராகவும் இருந்தார், அதற்கு அவர் பஹாகியா உலு கிந்தா மருத்துவமனை எனப் பெயர் மாற்றினார்.
பொதுமக்கள் இன்று மற்றும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கோலாலம்பூர், உகே ஹைட்ஸ், 32, லோரோங் லீ ஹின் நியோ 1 என்ற முகவரியில் இறுதி அஞ்சலி செலுத்தலாம்.
இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அதே முகவரியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு செந்துல் இந்து சுடுகாட்டில் தகனம் செய்யப்படும்.




