தாய்லாந்தின் பட்டாயா நகரில் நேற்று சூட்கேஸ் ஒன்றில் 17 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய நபர் ஒருவர் தாய்லாந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அந்தச் சிறுமியைக் கடத்தி கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தனக்குத் தொடர்பில்லை என்று மறுத்த 46 வயதான சந்தேக நபர், விசாரணை க்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக பட்டாயா நகரின் போலீஸ் அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சந்தேக நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாக, பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் “பிற ஆதாரங்களுக்காக” புலனாய்வாளர்கள் காத்திருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.
குழந்தையைக் கடத்துதல், கொலை, சடலத்தை மறைத்தல் மற்றும் “பாலியல் நோக்கங்களுக்காகச் சிறுமியைக் கடத்துதல்” ஆகியவை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், அந்தச் சந்தேக நபர் தாய்லாந்துச் சிறுமியுடன் பட்டாயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் நுழைவதை சிசிடிவி (CCTV) காட்சிகள் காட்டின.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு விமான டிக்கெட் வாங்க முயன்றபோது, வெள்ளிக்கிழமையன்று பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப் பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.பிறகு, சந்தேக நபர் பெரிய கருப்பு சூட்கேஸ் ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறி, அதை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் வெள்ளிக்கிழமையன்று ரயில் தண்டவாளத்திற்கு அருகில் அந்தச் சூட்கேஸைக் கண்டெடுத்த போலீஸார், அதனுள் வன்முறையின் அடையாளங்க ளுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் சடலத்தைக் கண்டறிந்ததாக ‘பட்டாயா நியூஸ்’ என்ற உள்ளூர் செய்தி இணைய தளம் தெரிவித்தது.
போதைப்பொருள் குற்றங்கள், பாலியல் கடத்தல் மற்றும் உரிமம் இன்றி வணிகம் நடத்துதல் போன்ற குற்றங்களுக்காக வெளிநாட்டினர் பலர் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவு கால அளவைக் குறைத்தது. – ஏஎஃப்பி




