மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் மெசஞ்சரைப் பயன்படுத்தி குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது வணிக நிறுவனங்களுடன் உரையாடும் கோடிக்கணக்கான மக்கள், வரவிருக்கும் ஒரு புதிய அப்டேட்டின் கீழ் இனி தங்கள் தொலைபேசி எண்களைப் பகிரத் தேவையில்லை என்று அந்நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, மக்கள் மற்றவர் களுடன் பகிர்வதற்காகத் தனித்துவமான பயனர்பெயர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். இது “உங்கள் தொலைபேசி எண்ணின் தனியுரிமையைப் பாது காக்கும் நோக்கில் வடிவமைக்கப் பட்டுள்ளது” என்று வாட்ஸ்அப் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
தொலைபேசி எண்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒரு பெரிய குழு அரட்டையில் சேர்க்கப் படுவது அல்லது ஒரு நபருக்கோ அல்லது வணிக நிறுவனத்திற்கோ முதல் முறையாக மெசேஜ் அனுப்புவது போன்ற சமயங்களில் அவை தானாகவே பகிரப்படாது என்று அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
மேலும், “பயனர் விவரங்களைப் பார்ப்பதற்கு எந்த டைரக்டரியும் இல்லை, பரிந்துரைகளும் இல்லை. எனவே, உங்களைத் தொடர்புகொள்ள மற்றவர்களுக்கு உங்கள் சரியான பயனர்பெயர் தெரிந்திருக்க வேண்டும்” என்று மெட்டா கூறியுள்ளது.
மற்ற சமூக ஊடக சேவைகளைப் போலவே, வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் — மெட்டாவின் கூற்றுப்படி மூன்று பில்லியனுக்கும் அதிகமானோர் — பலருக்கு அவர்கள் விரும்பும் முதல் பயனர்பெயர் கிடைக்காமல் போகலாம்.
“வரவிருக்கும் மாதங்களில்” உலகளவில் பயனர்பெயர் முன்பதிவுகளைப் படிப்படியாக அறிமுகப்படுத்தப் போவதாகவும், ஒவ்வொரு நாட்டிலும் அவை திறக்கப்படும்போது அந்தந்த நாட்டுப் பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.




