வீட்டின் நுழைவு வாயிலைத் திறப்பதற்காக காரை விட்டு வெளியே வந்தபோது, கார் திடீரென முன்னோக்கி நகர்ந்து மோதியதில் அதன் அடியில் சிக்கிக்கொண்ட பெண்ணை மீட்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப் பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) பிற்பகல் 3:39 மணியளவில் ‘தமன் தெமாரா’ (Taman Temara) பகுதியில் நடந்த இச்சம்பவத்தில், 38 வயதான அப்பெண் ணின் கால்களில் காயங்கள் ஏற்பட்டன.
கார் இன்ஜின் இயங்கிக்கொண்டிருந்த நிலையில் அப்பெண் வெளியே வந்த போது, வாகனம் திடீரென நகர்ந்ததால் அவர் கீழே விழுந்து காரின் அடியில் சிக்கிக்கொண்டதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நூர் அகமது தெரிவித்தார்.
“பொதுமக்கள் உடனடியாக உதவிக்கு ஓடிவந்து அப்பெண்ணை மீட்க முயன்றனர்; ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அவர்களால் அதில் வெற்றிபெற முடியவில்லை.
“பாசிர் புத்தே (Pasir Puteh) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் பிற்பகல் 3:43 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட பெண் காரின் அடியில் சிக்கியிருப்பதைக் கண்டனர்,” என்று அவர் ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 5) வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
மீட்புக் குழுவினர் நிலைமையை ஆய்வு செய்த பிறகு, ‘ஏர் லிஃப்டிங் பேக்’ (air lifting bag) மற்றும் ஹைட்ராலிக் கட்டர் (hydraulic cutter) ஆகியவற்றைப் பயன்படுத்தி வாகனத்தை உயர்த்தி, அப்பெண்ணை மீட்டதாக அவர் தெரிவித்தார்.
“மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக அவர் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்றும் அவர் மேலும் கூறினார்.




