வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிக்க மலேசியர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ள, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைத் தொடர்பு கொள்ளும் திட்டம் எதுவும் தன்னிடம் இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூருடனான நமது உறவு மிகவும் சிறப்பாக உள்ளது; இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது,” என்று இன்று நாடாளுமன்றத்தில் (டேவான் ரக்யாட்) நடைபெற்ற அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தில் அவர் கூறினார்.
“ஆனால், நமது நாட்டின் தேர்தல் விவகாரங்கள் உட்பட, மலேசியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுமாறு நான் பொதுவாகக் கோருவதில்லை.”
சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் மாநிலத் தேர்தலில் வாக்களிக்க நாடு திரும்புவதை அனுமதிக்குமாறு சிங்கப்பூர் பிரதமரைத் தொடர்புகொள்வாரா என்று சானி ஹம்ஸான் (PH-ஹுலு லாங்காட்) எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.
தேர்தல் ஆணையம் (EC) ஒரு சுதந்திர மான அமைப்பு என்பதால், முக்கியத் தேர்தல் தேதிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் அதற்கு மட்டுமே உள்ளது என்றும், அதில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் அன்வார் கூறினார்.
இருப்பினும், அதிக வாக்காளர்கள் தங்கள் குடிமைப் பொறுப்பை நிறை வேற்ற ஏதுவாக, வாக்குப்பதிவு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்று அவர் குறிப்பிட்டார்.




