vஇங்குள்ள சிலாங்கூர் மொத்த விற்பனைச் சந்தையில் (Selangor Wholesale Market) மின்சாதனங்கள் மற்றும் சமையலறை உபகரணங்களை விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தீ விபத்தில் கடையின் சுமார் 90 சதவீதப் பகுதி சேதமடைந்தது; ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இரவு 11.04 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து ஒன்பது நிமிடங்களில் ஸ்ரீ கெம்பாங்கன் (Seri Kembangan) தீயணைப்பு நிலையத்திலிருந்து முதல் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ள தாக ‘டிவி 3 செய்தி வெளியிட்டுள்ளது.
புக்கிட் ஜாலில், பிரசின்ட் 7 (Presint 7), பத்து 18 உலு லாங்காட், பெட்டாலிங் ஜெயா, பாங்கி, கே.எல்.ஐ.ஏ (KLIA), கெராமாட், ஹங் துவா, ஹர்தமாஸ், சைபர்ஜெயா, புக்கிட் ஜெலுடோங், சுபாங் ஜெயா மற்றும் டாமன்சாரா ஆகிய 13 தீயணைப்பு நிலையங்களும் இந்த மீட்புப் பணியில் உதவின என்று அந்தத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12.05 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வில், அந்த இடத்தில் இருந்த தீயணைப்பு நீர் குழாய்களைப் (fire hydrants) பயன்படுத்த முடியாத நிலை இருந்தது கண்டறியப்பட்டது.
அதிகாலை 1.20 மணிக்குத் தீ கட்டுப்பாட்டு க்குள் கொண்டுவரப்பட்டது; இருப்பினும், தீ முழுமையாக அணைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
அதிகாலை 4.35 மணி நிலவரப்படி, சுமார் 70 சதவீதத் தீ அணைக்கப்பட்டிருந்தது; மீதமுள்ள 30 சதவீதத் தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இப்பணியில் 68 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், ஐந்து தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் (FRT), ஒரு சிறிய ரக தீயணைப்பு வாகனம் (LFRT), இரண்டு ஏரியல் ஏணி தளங்கள் (ALP), ஒரு ‘பிரான்டோ’ ஏரியல் டவர் வாகனம் (BATV), மூன்று அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) பிரிவுகள் மற்றும் ஏழு தண்ணீர் லாரிகள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.




