Vimarsagan Media

Home » Malaysia » கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியக் கூட்டம்: ஹன்னா உறுதிப்படுத்தினார்

கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியக் கூட்டம்: ஹன்னா உறுதிப்படுத்தினார்

கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் (FTPB) கூட்டம் நாளை காலை நடைபெறும் என்பதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், அந்த வாரியத்தின் உறுப்பினராக இருக்கும் ஹன்னா, இது குறித்த கூடுதல் விவரங்களை அளிக்க மறுத்துவிட்டார்.

“ஆம், நாளை காலை 8.30 மணிக்கு மன்னிப்பு வாரியக் கூட்டம் நடைபெறும் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.நாங்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளோம்; இப்போதைக்கு என்னால் இதை மட்டுமே கூற முடியும்,” என்று இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் களிடம் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனு மீதான விவகாரம் இந்த வார வாரியக் கூட்டத்தில் எழுப்பப்படலாம் என்று இந்த விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன

நஜிப் தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்படலாம் என்று மற்றொரு வட்டாரம் கூறியது, இருப்பினும் இந்த விருப்பம் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

72 வயதான நஜிப், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு SRC இன்டர்நேஷனல் நிதியிலிருந்து RM42 மில்லியனைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். அவருக்கு RM210 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஆகஸ்ட் 2022 முதல் காஜாங் சிறையில் அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

பின்னர் FTPB அவரது சிறைத்தண்ட னையை ஆறு ஆண்டுகளாகப் பாதியாகக் குறைத்து, அபராதத்தையும் RM50 மில்லியனாகக் குறைத்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 22 அன்று, SRC இன்டர்நேஷனல் வழக்கில் தனக்குக் குறைக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி கோரிய நஜிப்பின் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி ஆலிஸ் லோக் தள்ளுபடி செய்தார்.

நஜிப்பின் தலைவிதியை யாங் டி-பெர்டுவான் அகோங் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடுவதாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

Scroll to Top