சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவு 60 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா இங்கு மூன்று முக்கிய சொத்துகளை வாங்கியிருந்தது.
இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதற்கு அடுத்த ஆண்டே கிரேஞ்ச் (Grange) ரோடு, பியர்ஸ் (Peirce) ரோடு ஆகிய இடங்களில் சொத்துகளை வாங்கியது. 1949இல் ஸ்டீவென்ஸ் (Stevens) ரோடு சொத்தையும் வாங்கியது.
31 கிரேஞ்ச் ரோடு – இந்தியத் தூதரகம்
31 கிரேஞ்ச் ரோடு முகவரியில் இந்தியத் தூதரகம் செயல்படுகிறது.
அந்தச் சொத்து முதலில் அதற்காக வாங்கப்படவில்லை. அன்றைய மலாயா, சிங்கப்பூர் வட்டாரத்தில் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதித்துவத்திற்காக அது பயன்படுத்தப்பட்டது.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவின் அதிகாரபூர்வ அரசதந்திரப் பணிகள் அங்கு தொடர்ந்தன.
2 பியர்ஸ் ரோடு– ‘India House’
சிங்கப்பூருக்கான இந்திய தூதரின் அதிகாரபூர்வ இல்லம் இது.
சுமார் 1911ஆம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தகர் ஓங் சாம் லியோங் (Ong Sam Leong) அந்த இரண்டு மாடி வீட்டைக் கட்ட ஏற்பாடு செய்ததாக Roots மரபுடைமைத் தளம் குறிப்பிடுகிறது.இந்திய அரசாங்கம் 1948இல் அந்த வளாகத்தை வாங்கியது.
1990களில் வீட்டின் மீது பெரிய மரம் விழுந்ததால் கட்டடம் கடுமையாகச் சேதமடைந்தது. 2007 முதல் 2009 வரை அது மறுசீரமைக்கப்பட்டது.
அப்போது சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராக இருந்தவர் தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
அசல் கட்டட வரைபடங்கள் இல்லாத நிலையில், பழைய ஆவணங்களையும் எஞ்சியிருந்த கட்டட அம்சங்களையும் கொண்டு அதன் வரலாற்றுச் சிறப்புகள் மீட்டெடுக்கப்பட்டன.அந்தப் பணிக்கு 2009ஆம் ஆண்டு நகரச் சீரமைப்பு ஆணையம் கட்டடக்கலை மரபுடைமை விருது வழங்கப்பட்டது.
54 ஸ்டீவன்ஸ் சாலை
பல ஆண்டுகளாக அதிகம் பேசப்படாத இந்தச் சொத்து, அண்மைக் காலத்தில் மீண்டும் கவனம் பெற்றது.
இந்தியா – சிங்கப்பூர் உறவு விரிவடைந்துவரும் வேளையில் மேலும் அதிகமான சந்திப்புகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்த புதிய இடம் வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஸ்டீவன்ஸ் ரோடு சொத்தில் புதிய தூதரக வளாகத்தைக் கட்டுவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்தப் புதிய அலுவலகத்துக்கும் குடியிருப்புக் கட்டடத்துக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
8,700 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அவ்விடத்தில் 4 மாடி தூதரக அலுவலகமும் 5 மாடி குடியிருப்புக் கட்டடமும் அமையவிருக்கிறது.
கட்டடம் 2028ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்.-Seithi MediaCorp




