முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது வியாழக்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று வெள்ளிக்கிழமையன்று முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவுள்ளது.
நீதிமன்ற வழக்கு விவரப் பட்டியலின்படி, சரவணனின் வழக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அமர்வு நீதிமன்ற நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான தகவலறிந்த வட்டாரங்களின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு இதுவாகும். தபா நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 2020 முதல் 2022 வரை மனிதவள அமைச்சராகப் பணியாற்றினார்.
வெள்ளிக்கிழமையன்று தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளதை சரவணன் உறுதிப்படுத்தினார். ஆரம்பத்தில் தன் மீது குற்றம் சாட்டிய நபர், பின்னர் அக்குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதாகச் சட்டப்பூர்வ உறுதிமொழி களை (statutory declarations) அளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், வழக்கின் முக்கியத் தொடர்பே இல்லாத போது எவ்வாறு ஒரு வழக்கை உருவாக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இருப்பினும், அக்குற்றச்சாட்டை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சரவணன் கூறினார்.




