பாடகரும் இசையமைப்பாளருமான யாசின் சுலைமான், பேராக் மாநிலம் உலு கிந்தாவில் உள்ள பாஹாகியா மருத்துவ மனையில் (Hospital Bahagia Ulu Kinta) மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகு இன்று அங்கிருந்து விடுவிக்கப்பட்டார்.
யாசின் வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கடந்த வாரமே தங்கள் குடும்பத்தின ருக்குத் தெரிவித்திருந்ததாக அவரது சகோதரர் ஜைன் சுலைமான் கூறியதாக ‘புலெட்டின் டிவி3’ செய்தி வெளியிட்டு உள்ளது.
“இன்று அவர் (யாசின்) அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்; வீட்டிற்குத் திரும்புவதற்கான அனுமதி உறுதி செய்யப்பட்டது. பல நடைமுறைகளை நிறைவு செய்ய வேண்டியிருந்ததால் இந்த முடிவை எடுக்கக் காலதாமதம் ஏற்பட்டது.
“இருப்பினும், அவரை இன்று அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கடந்த வாரம் தன்னைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டது,” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
51 வயதான யாசின் நல்ல உடல்நலத்துடனும் மன உறுதியுடனும் இருப்பதாக ஜைன் தெரிவித்தார்.
யாசின் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும், ஒவ்வொரு மாதமும் மருத்துவமனையில் தொடர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், யாசின் மீதான போதைப்பொருள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தது; முன்னதாக அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 16 பிரம்படிகளை விதித்திருந்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு ரத்து செய்தது.



