Vimarsagan Media

Home » Malaysia » பேராக் ஆற்றில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்:- எந்தத் தடயமும் கிடைக்கவில்லை

பேராக் ஆற்றில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்:- எந்தத் தடயமும் கிடைக்கவில்லை

கோலா கங்சாரில் உள்ள லெம்பா ஜெட்டி (Lembah Jetty) அருகே, சுங்கை பேராக் ஆற்றில் ஆகஸ்ட் 14 அன்று ஒரு பைக்குள் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆற்றிற்குள் வீசப்படுவதற்கு முன்பு அப்பெண் கட்டப்பட்டிருந்ததாகவும், அவரது முகம் மூடப்பட்டிருந்ததாகவும் போலீசார் கருதுகின்றனர்.

30 வயது மதிக்கத்தக்க அப்பெண் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை என்றும் பேராக் மாநில காவல் துறைத் தலைவர் அல்வி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.

தேசிய பதிவுத் துறை மற்றும் பிற அமைப்புகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அவரை அடையாளம் காண உதவும் எந்தப் பதிவுகளும் கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களுடன் ஒத்துப்போகும் வகையில் காணாமல் போனவர் குறித்த புகார்கள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“தற்போதைக்கு, பாதிக்கப்பட்ட வரிடமிருந்து பெறப்பட்ட பல மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன; அவற்றின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

“அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், முடிவுகள் வரச் சிறிது காலம் ஆகலாம்,” என்று சுங்கை சிபுட் காவல் துறை தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய குடிவரவுத் துறை மற்றும் இன்டர்போல் (Interpol) போன்ற அமைப்புகளுடனும் இணைந்து செயல்படவுள்ளதாக அல்வி தெரிவித்தார்.

ஆழமற்ற சுங்கை பேராக் ஆற்றின் நடுவே ஒரு சூட்கேஸ் சிக்கிக் கொண்டதால், ஆற்றில் நீர்மட்டம் குறைந்திருந்த நிலையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாகவே செய்தி வெளியிட்டி ருந்தன.

Scroll to Top