2018-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் பட்டு வரும் நடைமுறையின்படி, தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ அழைப்புகள் முன்னாள் பிரதமர்களுக்குத் தானாகவே வழங்கப்படுவதில்லை என்று 2026 தேசிய தினக் கொண்டாட்டச் செயலகம் நேற்று தெரிவித்தது.
டத்தாரான் புத்ராஜெயாவில் (Dataran Putrajaya) நேற்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கலந்துகொண்டது குறித்து எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து இச்செயலகம் இந்த விளக்கத்தை அளித்தது.
2026 தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டச் செயல்பாட்டுக் குழுவின் தலைவரும், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளருமான டத்தோ அப்துல் ஹலீம் ஹம்சா இதுகுறித்துக் கூறுகையில், முக்கிய அதிகாரப்பூர்வ கூட்டாட்சி அரசாங்க நிகழ்வுகளுக்கான அழைப்பு நடைமுறைகள், பிரதமர் துறையின் நெறிமுறை மற்றும் சர்வதேச மாநாட்டுச் செயலகப் பிரிவால் (BIUPA) நிர்வகிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
“2018-ஆம் ஆண்டு முதல் உள்ள நடைமுறையின் அடிப்படையில், தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்புகள் முன்னாள் பிரதமர்களுக்குத் தானாகவே வழங்கப்படுவதில்லை.
“இருப்பினும், முன்னாள் தலைவர்கள் கலந்துகொள்வது தடுக்கப்படுவதில்லை; அதிகாரப்பூர்வ அழைப்புகளை நிர்வகிப்பதற்கான நடைமுறைகளுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட தரப்பினர் விண்ணப்பிப்பதன் மூலம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள முடியும்,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.




