நாட்டை விட்டு சட்டவிரோதமாகக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 101 பறவைகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் இலங்கை நபர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகச் செய்திகளின்படி, இந்தோனேசியாவின் பான்தென் (Banten) பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (05) அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
பயணப் பெட்டிக்குள் இருந்த 15 சிறிய பெட்டிகளில் அந்த 101 பறவைகளும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டி ருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சந்தேக நபர் அப்பறவைகளை இந்தோனேசியாவிலிருந்து சட்ட விரோதமாகக் கொண்டு செல்ல முயன்றதாகக் கருதப்படுகிறது. இதில் கண்டெடுக்கப்பட்ட சில பறவை இனங்கள், இந்தோனேசியாவின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் கீழ் பாதுகாக்கப்படுபவை என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் மற்றும் சந்தேக நபர் குறித்து இந்தோனேசிய தனிமைப் படுத்தல் அலுவலகம் (Quarantine Office) மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு முகமை (Natural Resources Conservation Agency) ஆகியவை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.




