நாட்டின் சிறந்த எஸ்டிபிஎம் 2025 மாணவர்களில் மொத்தம் 27 பேர், பொதுப் பல்கலைக்கழகங்களில் (UA) இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான கல்விக் கட்டண நிதியுதவியைப் பெற்றனர்.
வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் மேலும் முன்னேறவும் இம்மாணவர் களுக்குத் திறன் உள்ளது என்று அரசாங்கம் நம்புவதால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜம்ப்ரி அப்துல் காதிர் (படம்) தெரிவித்தார்.
“பின்னணி எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் கற்றல் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கல்வியை அணுகும் உரிமையை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.
“அவர்களில் சிலர் பின்தங்கிய பின்னணியிலிருந்தோ, நகர்ப் புறங்களுக்கு வெளியிலிருந்தோ அல்லது தொலைதூர கிராமப்புற சமூகங்களிலிருந்தோ வந்திருக்கலாம்; இருப்பினும் அவர்கள் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர்.
“நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் உண்மையான சொத்து,” என்று திங்கள்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற கல்விக் கட்டண நிதியுதவி வழங்கும் விழாவில் அவர் கூறினார்.
கல்வியின் சர்வதேசமயமாக்கல் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், படிப்பைத் தொடர மலேசியாவிற்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், வெளிநாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக உள்ளூர் மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று இதற்குப் பொருளல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.




